இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த்தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
தமிழ்நாட்டில் 2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. மாநிலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை மூன்று மாதங்களாக தொடர்ந்து வழங்கப்பட்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் (அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி) நியாயவிலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும்.
அதற்காக மே 29 முதல் 31ஆம் தேதிவரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று டோக்கன் (Token) வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், ஜூன் 1ஆம் தேதிமுதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நடைமுறையின்படி, ஜூன் 1ஆம் தேதிமுதல் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தின் பயன்களும் சவால்களும்!