சென்னை: சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஒலிம்பியா கிரான்ட் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு 745 குடியிருப்புகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடிருப்பு கட்ட நிர்மாண் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பல்வேறு நிபந்தனைகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
அதில் குறிப்பாக, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை வசதிகளை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு சம்மதம் தெரிவித்த அந்நிறுவனம், பெயருக்கென்று ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கட்டி இருப்பதாகவும், அது முறையாக அமைக்கப்படதாதால் கழிவுநீர் வெளியில்வந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் உற்பத்தியாவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத கே.எஸ்.எம். நிர்மாண் கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒலிம்பியா கிரான்ட் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் விசாரித்தனர்.
இதையும் படிங்க:Salem ARRS: வரதட்சணை கொடுமை: தர்ணாவில் ஈடுபட்ட சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் உரிமையாளரின் மருமகள்!
அப்போது, கழிவு நீர் சுத்திரிப்பு நிலையம் அமைப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் ஒப்புதல் பெறவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்டுமான பணிகள் முடிந்து குடியிருப்பு சங்கத்தின் வசம் 2017ஆம் ஆண்டே முழுமையாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், 6 மாதத்திற்கு பிறகு தாக்கல் செய்த வழக்கை ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.பசுமை தீர்ப்பாய சட்டத்தில் கூறப்பட்டுள்ள கால வரம்பை தாண்டி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்பதால், இதை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி, சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:தஞ்சையில் களைகட்டும் கள்ள மது விற்பனை.. திமுக நிர்வாகியின் வாக்குமூலம்.. கோஷ்டி மோதலில் 4 பேர் கைது!