சென்னை: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ். பழனி நாடார், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில், பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜூலை 05) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தபால் வாக்குகள் பதிவு செய்தது, எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்குத் தொடர்ந்த செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர், சின்னம் யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு!