சென்னை: கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக பணிபுரிந்துவந்த முத்துமாலைராணி என்பவர் நிறுத்தி வைக்கப்பட்ட, தனது ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.
மருந்து ஸ்டோர் அலுவலராக இருந்தபோது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியாகி, அரசு கருவூலத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கரோனா பாதிப்புக்குப்பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பல நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதைச்சுட்டிக்காட்டிய நீதிபதி, புதிய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற நோய்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மருந்து நிறுவனங்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனவா? என்பதை விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, புதிது புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகனின் உடல் அவரது முதல் மனைவியிடம் ஒப்படைப்பு