சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடை, சரவணா ஸ்டோர்ஸ், என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மின் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்ற கட்டிட தளங்களை தவிர்த்து, அனுமதி பெறாத தளங்களிலும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதாக கிடைத்த புகாரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸை எதிர்த்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. அதில் அனுமதிக்கப்பட்ட கட்டிட தளங்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தி வருவதாகவும், தமிழ்நாடு மின்வாரியத்தின் நோட்டீஸை ரத்து செய்யக் கோரியும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மின் பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மின் இணைப்பு பெறும் போது வழங்கப்பட்ட வரைபட திட்டத்தையும் மீறி அனுமதி அளிக்கப்படாத தளங்களிலும் நிறுவனங்கள் மின் இணைப்பை பயன்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும், உரிய அனுமதி பெறாமல் தமிழக மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில், தவறான முறையில் மின் இணைப்பை பயன்படுத்திய நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ்குமார், தனியார் நிறுவனங்கள் மீது மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் தேர்வில் மின்னல் வேகம் ஏன்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!