சென்னை: இந்து மத கடவுள்களை பற்றி இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மதுரவாயலில் உள்ள திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை (64) அவரது இல்லத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (ஜூலை 31) காலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் மீது பேச்சால் சாதி உணர்ச்சிகளை தூண்டிவிடுதல், குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்து மத கடவுள் முருகனை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதாகவும், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாகவும் இயக்குநர் வேலு பிரபாகரன் மீது பல்வேறு இந்து அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்பினர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியது நிரூபணமாகியதால் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த ஐந்து பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க: 3 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கிய சோனு சூட்!