கரோனா தொற்று அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு 100 நாட்களை கடந்து அமலில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் முன்களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து திரு.வி.க.பூங்கா திரைப்பட கதாநாயகன் - இயக்குநர் செந்தில், தூய்மைப் பணியாளர் ஒருவரை கவுரவப்படுத்தி உள்ளார். கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்குட்பட்ட தூய்மைப் பணியாளர் லதா என்பவர், நாள் தவறாமல் தகுந்த இடைவெளியைை கடைப்பிடித்து பணிபுரிந்துள்ளார்.
அவரது சேவையை பாராட்டி சிறந்த தூய்மைப் பணியாளர் விருது வழங்கியும் சால்வை அணிவித்தும் செந்தில் கவுரவப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது, "தூய்மைப் பணியாளர்களை மதித்து அவர்களை நம் உறவுகளாக பார்ப்போம். ஏனென்றால் அவர்களால்தான் நம் பாரதம் மணக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.