சென்னை: பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனிமேஷன் துறையின் 6ஆம் நாள் சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் மாணவர்கள் ஓவியம், ஊடக வினாடி வினா, குறும்படம் தயாரித்தல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குநர்களுடன் குழு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.முத்துராமன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை, கல்லுரி நிறுவனர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் பேசியதாவது, “கல்லூரிகளுக்கு செல்லும்போது தயார் செய்துகொண்டு வருவேன். மாணவர்களை பார்த்து பயம், என்ன சாதனை செய்தேன் என தெரியவில்லை. 70 படங்கள் இயக்கி உள்ளேன், அது சாதனையா?. ரஜினி, விஜயகாந்த்-ஐ வைத்து படம் இயக்கினேன், அது சாதனையா? என்னைப் பற்றி சொல்லும்போது, எங்கள் தளபதி என கூறும்போது சந்தோசமாக இருந்தது.
இந்த விருது என் மனைவிக்கு கொடுத்து இருக்க வேண்டும். அவரது சாதனை வெளியில் தெரியவில்லை. எந்த நம்பிக்கையில் என்னை திருமணம் செய்து கொண்டார், நான் முரட்டு பயலாக இருந்தேன். கதை சொல்லும்போது உரிய நேரத்திற்கு தயாரிப்பாளர்கள் வரவில்லை என்றால், வந்து விடுவேன். என்னை மனிதனாக மாற்றியது எனது மனைவி.
நான் 70 படம் இயக்கினேன், ஆனால் அவர் ஒரு படம்தான் இயக்கினார். அந்த படம் வெள்ளி விழா கண்டது. விஜய்யை தமிழகத்திற்கு கொடுத்தார். இவ்வளவு சாதனை செய்தவருக்கு கொடுக்காமல் எனக்கு கொடுக்கிறார்கள். எனக்கு பெயர் கிடைத்தது போல், நீங்கள் பெயர் எடுக்க வேண்டும். இன்னாரது மகனின் தந்தை செல்கிறார் என கூற வேண்டும். விஜய் ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.
எந்த நடிகனின் அப்பாவையும் அப்பா என கூறியதில்லை, ஆனால் என்னை அப்பா என அழைக்கின்றனர். அப்படிப்பட்டவரை வீட்டில் வைத்துக் கொண்டு, எனக்கு சாதனையாளர் விருது கொடுக்க வேண்டும், படம் எடுத்து ரிலீஸ் செய்தவற்குள் மூச்சு போய் விடுகிறது. இந்த விருதை முத்துராமனுடன் இணைந்து கொடுக்கிறார்கள். அது பெருமையாக உள்ளது. படம் எடுத்தால் கருத்து சொல்ல வேண்டும், இல்லை என்றால் படம் எடுக்கக் கூடாது.
அது குறைந்து போனதால், அதனை எடுத்துச் சொல்கிறேன். நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம், ஆனால் மனிதனாக வாழ்ந்து வருகிறேன். நான் ஏசுவைத் தொடரவில்லை, அவர் கூறிய செய்தியைத் தொடர்கிறேன். கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளை, உங்கள் பிள்ளைகள்போல் வர வேண்டும் என மாற்றுங்கள். தற்போது கத்தி, ரத்தம், சத்தம் என படங்கள் ஆகிவிட்டது. காதலுக்கு மரியாதை, லவ் டுடே, துள்ளாத மனம் துள்ளும் என்பது இல்லை" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீரிலும், நிலத்திலும் செல்லும் ரோவர் படகு.. கோவையில் உள்ள தனியார் நிறுவனம் அசத்தல்!