சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 79 ஆயிரம் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவற்றை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.15) விசாரணைக்கு வந்த போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடியிருப்பு நிலங்களாக வகை மாற்றம் செய்ய தடை உள்ள நிலையில், அந்நிலத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மக்கள் தொகை அதிகரிப்பு - தேவை அதிகரிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர், மக்கள் தொகை அதிகரிப்பு, வேலை வாய்ப்புக்காக தொழிற்சாலைகள் தொடங்க விலக்களிக்கப்படுவதாகவும், இந்த மனு சம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மக்கள் தொகை அதிகரித்து வருவதால், குடியிருப்புகளுக்கும், தொழில்சாலைகளுக்கும், நிலங்களின் தேவை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நீண்டகால திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இதுதொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்