சென்னை: மியான்மர் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருமளவு வசிக்கின்றனர். ஆனால், மியான்மருக்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மியான்மர் நாட்டின் யங்கோன்-சென்னை இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யங்கோன்-சென்னை இடையே பயணிகள் விமான சேவை தொடங்குகிறது.
யங்கோனில் இருந்து சென்னை வரும் விமானம், மீண்டும் சென்னையில் இருந்து யங்கோன் புறப்பட்டுச் செல்கிறது. இந்த விமானத்திற்குப் பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து வாரத்தில் மேலும் சில நாட்கள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தின் டிவிட்டர் பக்கத்தில், "மியான்மர் நாட்டின் யங்கோன் நகரில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து யங்கோன் நகருக்கும் இடைநில்லா புதிய விமான சேவையை, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மியான்மர் ஏர்வேஸ் நிறுவனம் துவக்குகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை மட்டும் இந்த விமானம் இயக்கப்படுகிறது. யங்கோன் மற்றும் சென்னை இடையே மியான்மர் ஏர்வேஸ் நிறுவனத்தின் A320/, A319 விமானங்கள் இயக்கப்பட உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டிலுள்ள யங்கோனில் இருந்து டெல்லி, கொல்கத்தா, பீகார் மாநிலத்தின் கயா ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. தற்போது இந்தியாவின் நான்காவது நகரமாக சென்னைக்கு நேரடி விமானம் இயக்கப்பட உள்ளது. புதிய விமான சேவைக்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை - வங்கதேசத் தலைநகர் டாக்கா இடையே, வாரத்தில் 4 நாட்கள் நேரடி விமானம் இயக்கப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததால் கடந்த 26ஆம் தேதி முதல் வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் அனைத்திற்கும் ஒரே இ-டிக்கெட்!