அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து வேறு ஏதேனும் பொதுச்சின்னத்தை அமமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சின்னம் தெரியாமலேயே மார்ச் 27ஆம் தேதி முதல் தினகரன் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அவர் செல்லும் இடமெல்லாம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் எனப் பேசி வந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், அமமுகவின் சார்பில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ‘பரிசுப்பெட்டி’யை பொதுச் சின்னமாக தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் கிடைத்த இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என அமமுகவினர் கூறி வருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்திடமிருந்து பரிசுப்பெட்டி சின்னத்தை அமமுக பெற்ற சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #GiftBox, #பரிசுப்பெட்டி ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
இதனிடையே, தனது கட்சியினருக்கு பரிசுப்பெட்டியை பொதுச்சின்னமாக வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.