சென்னை: ஆப்பிரிக்கவின் நமீபியாவிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் குனோ உயிரியல் பூங்காவிற்கு 8 சிவிங்கிப்புலிகள் (Cheetah) கொண்டு வரப்பட்டன. இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளை கொண்டுவந்திருப்பது வனம் மற்றும் புல்வெளி சூழலை மீட்டமைக்க உதவும். இது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுவதுடன் தண்ணீர் பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு பயனளித்தல் போன்ற சூழல் சேவைகளை விரிவுப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரிய பூனை (Big Cats) இனங்களில் ஒன்றான சிவிங்கிப்புலிகள், இந்தியாவில் 1952ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் அவை வாழ்ந்துள்ளதற்காக சான்றுகள் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் சிவிங்கிப்புலிகள் வாழ்ந்து வந்ததாக வன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து வன உயிரின ஆராய்ச்சியாளர் எ.குமரகுரு கூறுகையில், "இந்தியா மொழி வாரியான மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது, இந்த சிவிங்கிப்புலிகள் முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மாசினங்குடி, தளவாடி, நீலகிரி வனப்பகுதிகளில் காணப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 'சரஸ்வதி' என்ற நூலகத்தில் சிவிங்கிப்புலிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்கான தரவுகள் உள்ளன. கடந்த 1955ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண சபையில் வாழ்ந்த அரசர்கள், சிவிங்கிப்புலிகளை மற்ற விலங்குகளை வேட்டையாடுவதற்காக தங்களது செல்லப்பிராணிகளாக வளர்த்துள்ளனர்.
நாளடைவில் சிவிங்கிப்புலிகளும் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு ஒட்டுமொத்தமாக அழிந்துள்ளன. இந்திய வனப்பகுதிகளில் மற்ற மாமிச உண்ணிகள் ஏற்கனவே வாழ்விடத்தை ஆக்கிரமித்துள்ளதால், சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது ஒரு சவாலாக இருக்கும்.
இயற்கை அழிவு தொடர வாய்ப்புகள் அதிகம். ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள், இங்குள்ள மற்ற பெரிய விலங்குகளால் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்” என்றார்.
அதேபோல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் கிருஷ்ணராஜ் கூறுகையில், "இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், ஆசிய சிவிங்கிப்புலி (Asiatic Cheetah) வாழ்ந்துள்ளது. இந்த புலிகள் அரசர்கள் மற்றும் ராணிகளால் வளர்க்கப்பட்டு, சிறு மான்கள் மற்றும் கரும்புலி எனப்படும் மான்களை வேட்டையாட பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், இந்த சிவிங்கி புலிகளை காடுகளில் விடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள புல்வெளிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புல்வெளிகள் புலிகள் மற்றும் சிறுத்தைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உயரமான இடங்களில் அமைந்துள்ளன.
மாமிச உண்ணிகளை அறிமுகப்படுத்துவது மாநிலங்கள், வனவிலங்கு சுற்றுலாவை மேம்படுத்த உதவும். எனினும் புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு வனப்பாதுகாப்பு தலைமை அலுவலர் சீனிவாசரெட்டி கூறுகையில், "சிவிங்கி புலிகள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வாழ்ந்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு சிவிங்கி புலிகள் வேண்டும் என உடனடியாக எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை.
ஏனெனில், பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த விலங்குகள் மறுஅறிமுகம் செய்ய இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விலங்குகள் இங்குள்ள தட்ப வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து நிலைத்திருந்தால், அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முன்மொழியலாம்” என கூறினார்.
இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி