சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அலுவலர் சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக்கூறி ரூ.100 கோடி மான நஷ்ட ஈடுகோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்பு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை களங்கப்படுத்தும் விதமாக கருத்துகளைக் கூறியுள்ளதால் ஐபிஎஸ் அலுவலர் சம்பத் குமார் மீது குற்றவியல் அவதூறு வழக்குத்தொடர அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரிடம் அனுமதி கேட்டு இருந்தார்.
தலைமை வழக்கறிஞர் அனுமதி வழங்கி இருந்த நிலையில், ஐபிஎஸ் அலுவலர் சம்பத் குமாருக்கு எதிராக தோனி சார்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன், அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் - நிர்வாகம் அறிவிப்பு