குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் சென்னை கொண்டித்தோப்பு, மண்ணடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கிவைத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட ஏராளமான திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது வீடு வீடாகக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதி மாறன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூறுகிறார் என்றும், அப்படியானால் அவரது சக அமைச்சரவையில் உள்ள நிலோபர் கபீல் பயங்கரவாதியா? என்றும், பாஜகவைவிட அதன் அடிமையாக உள்ள அதிமுகவின் அமைச்சர் இவ்வாறு பேசுவது தேவையற்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஜெயக்குமார் அமைதியாக இருக்க இருக்க அவர் மீது சந்தேகம் வருகிறது என்றும், இந்த விவகாரத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு