தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு வருகைதந்த சிறப்பு நரம்பியல் நிபுணர் தனராஜுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் நினைவுப் பரிசு வழங்கினார்.
பக்கவாத நோய் குறித்து நரம்பியல் சிறப்பு நிபுணர் தனராஜ் கூறுகையில், "பக்கவாத நோய் என்பது நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது தடையோ ஏற்படுவதனால் மூளைக்கு ரத்தம் செல்வது குறைந்து அதன் செயல்பாடுகளை இழக்கும் நிலை ஏற்படும். மேலும் ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் உடலில் ஒரு பக்கமோ அல்லது முழுவதுமோ இயங்காத நிலை ஏற்படுவதுடன் புரிதல் திறன், பேசும் தன்மை, பார்வை மங்குதல் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.
பக்கவாத நோய்க்கான முக்கியமான அறிகுறிகளாக வாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு தடுமாறுதல், கை கால்கள் வராமல் போவது ஆகியவையாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ளவர்கள் இதற்கான சிகிச்சை உள்ள மருத்துவமனைக்கு ஆறு மணி நேரத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு சென்று அதற்கான மருந்துகள் எடுத்தால் ரத்த தடை நீங்கும். ஆனால் அதே சற்றுநேர தாமதத்திற்கு பிறகு 24 மணி நேரத்திற்குள் அழைத்துச் சென்றால் அறுவை சிகிச்சை மூலம் ரத்த அடைப்பை அகற்ற முடியும். நோயாளி எவ்வளவு வேகமாக மருத்துவமனைக்குச் செல்கிறாரோ அதற்கேற்ப எளிதில் சிகிச்சை அளிக்க முடியும்.
பக்கவாத நோய் வருவதற்கு முக்கியக் காரணங்களாக ரத்த அழுத்தம் அதிகமாக இருத்தல், சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல், கொழுப்பு சத்து உடலில் அதிகமாக இருத்தல், புகைப்பிடித்தல், இருதயக் கோளாறு, குடிப்பழக்கம் போன்றவற்றை தவிர்த்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் இந்த நோய் வருவதை 50 முதல் 60 சதவிகிதம் தவிர்க்க முடியும்.
மேலும் இருதய அடைப்பு, கால்களில் ரத்த ஓட்டம் தடைபடாமல் பார்த்துக் கொள்ளலாம். சென்னையில் தினமும் 30 முதல் 35 நபர்களுக்கு பக்கவாத நோய் வருகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகின்றனர். ஆனால் தொடர்ந்து சரியான சிகிச்சை மேற்கொண்டால் 50 முதல் 60 சதவிகிதம் பேர் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்" என்றார்.