சென்னை மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக ரூ 2.60 கோடி செலவில் ‘மெரினா உயிர் காப்பு பிரிவு’ திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
இதில் ஒப்பந்த அடிப்படையில் எட்டு மீனவர்கள் 16,000 ரூபாய் ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் புதியதாக எட்டு ஜெட்ஸ்கி (Jetski) வாகனம், ப்ரோட்டோ டைப் ட்ரோன், ஸ்டேண்ட் அப் பெடலிங்ஸ்தார் ஜீப் வாகனம் மற்றும் ட்ராக்டர்களையும் டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
![மெரினா உயிர் காப்பு பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திரபாபு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16531436_dgp.jpg)
தொடர்ந்து கடலலையில் சிக்கி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் விதமாக, கடலோர காவல் படையின் அதிவிரைவு படகுகள் மற்றும் மீட்பு படையினர் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடலில் மீனவர்களுக்கு உதவி செய்வது, கடலில் மூழ்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.
![கடலில் மூழ்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் ஒத்திகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16531436_dgp1.jpg)
குறிப்பாக ப்ரோட்டோ டைப் ட்ரோன் மூலம் அலையில் தத்தளிப்பவர்களுக்கு சேப்டி ட்யூப் வழங்குவது குறித்த ஒத்திகை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “கடந்தாண்டு 63 நபர்கள் கடலில் முழ்கி இறந்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி எட்டு மீனவ இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு மாதச் சம்பளம் 16,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
கடல் அலையில் சிக்கியிருப்பவர்களை 1098 என்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு மையங்கள் நான்கு இடத்தில் செயல்படுத்தப்படும். அவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த பணிக்காக மிகவும் சிறப்பான வீரர்களையே தேர்வு செய்துள்ளனர்.
இது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு நீச்சல் பழகிக்கொள்வது கட்டாயம் தேவை. மேலும் கடலில் நீச்சல் அடிப்பது மிகவும் சவாலானசெயல். கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்சாரம் காரணமாக 20 கிலோ மீட்டர் அளவிற்கு கூட உள்ளிழுத்து செல்லப்படும் அபாயம் இருக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அக்டோபர் 2 மனித சங்கிலி.. காவல்துறை நல்ல பதிலை தரும் என எதிர்பாக்கிறோம்...திருமாவளவன்