சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக சிறிய பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரித்து வருவதாகவும், மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் செல்லக்கூடாது எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “குறைவான மதிப்பெண், சிறு தோல்வி, வகுப்பு தலைவராக நியமிக்கவில்லை போன்ற சிறு காரணங்களுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை போன்ற மோசமான முடிவுகளை எடுக்கின்றனர். மாணவர்களாகிய நீங்கள் நாட்டின் சொத்து, தற்கொலை செய்து கொள்வது சமூதாயத்திற்கு எதிரான குற்றம்.
நாளடைவில் நாட்டின் முதலமைச்சராகவோ, தலைமை செயலாளராகவோ, விஞ்ஞானியாகவோ, காவல் துறை டிஜிபியாகவோ செயல்பட வாய்ப்புகள் உங்களுக்கு வரலாம். தற்கொலை செய்து கொள்வதால் இது போன்ற வாய்ப்புகளை அடைய முடியாது.
மாணவர்கள் பெற்றோரின் எதிர்காலமாக இருக்கின்றனர். சிறு பிரச்சிசனைக்காக திடீரென உயிரை மாய்த்துக் கொள்வதால் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை நினைத்து பார்க்க வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மாணவர்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுகொள்ளலாம்.
மேலும், 1098 என்ற தற்கொலை தடுப்பு உதவி மைய எண் மற்றும் 9152987821 என்ற உதவி எண்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும். மாணவர்கள் வரப்போகும் தேர்வுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு படிப்பே சுகமானதாக இருக்கும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தற்காப்புக்காகவே என்கவுன்ட்டர்; ரவடிகள் கைது தொடரும் - தென் மண்டல ஜஜி