சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அலுவலர் புகார் அளித்தார். தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.
பாலியல் வழக்கு
இந்தக் கமிட்டி விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராகக் குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வழக்குப்பதிவு செய்து விசாரித்த சிபிசிஐடி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்துள்ளது.
இந்நிலையில் விசாகா கமிட்டி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். மேலும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலைபட்சமாகச் செயல்படுவர் என்பதால் இருவரையும் நீக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
விசாகா கமிட்டி அறிக்கை
இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று (டிசம்பர் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் முன்னிலையாகி விசாகா கமிட்டி அறிக்கையைச் சமர்ப்பித்ததால், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி