சென்னை: பெங்களூருவைப் பூர்விகமாகக் கொண்ட பிரதீப் பிலிப், 1987ஆம் ஆண்டு நேரடியாக இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி, தமிழ்நாடு காவல் துறையில் தனது பணியைத் தொடங்கினார். 34 ஆண்டுகளாகத் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய பிரதீப் பிலிப், ராமநாதபுரம் உள்பட நான்கு மாவட்டங்களில் போதைத் தடுப்புப் பிரிவு, காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து பதவி உயர்வு பெற்று காவலர் பயிற்சி மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவில் மண்டல காவல் துறைத் தலைவராக (IG) பணியாற்றியுள்ளார். பின்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறைக் கூடுதல் தலைவராகவும் (ADGP) பணியாற்றினார்.
பிரிவு உபச்சார விழா
இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வு மற்றும் தமிழ்நாடு காவல் பயிற்சியின் காவல் துறைத் தலைவராக (DGP) பணியாற்றினார்.
காவல் துறையில், காவலர்கள் நண்பர்கள் குழுவை, தமிழ்நாடு காவல் துறைக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. இவர் காவலர் நண்பர் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அன்று பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
மேலுன் இவருக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு தலைமையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதீப் பிலிப், காவல் துறையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொப்பியும், பேட்ஜும்
அப்போது அவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தின்போது தான் அணிந்திருந்த தொப்பியையும், பெயர் பேட்ஜையும், நீதிமன்ற அனுமதியுடன் ஓய்வுபெறும் நாளில் அணிந்துப் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.
அதாவது, தேர்தல் பரப்புரைக்காக 1991 மே 21 அன்று, ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலைசெய்யப்பட்டார். இச்சம்பவத்தில், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததனால், படுகாயமடைந்து உயிர் தப்பினார்.
பணியின்போது அவர் அணிந்திருந்த தொப்பி, பேட்ச் உள்ளிட்டவை ஆவணப் பொருள்களாக வழக்கில் வைக்கப்பட்டிருந்தன. தன்னுடைய பணிக்கான கடைசி நாளில் அந்தத் தொப்பியையும், பேட்ஜையும் அணிந்துப் பார்க்க ஆசைபட்ட அவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், பிரதீப் பிலிப்புக்கு, அந்தத் தொப்பியையும், பேட்ஜையும் அணிந்துகொள்ள அனுமதியளித்தார். இதையடுத்து தொப்பியையும், பேட்ஜையும் அணிந்துகொண்டு தனது விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டார். இதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிபந்தனைத் தொகை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வுபெற்றார் டிஜிபி பிரதீப் பிலிப்: ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது உடனிருந்தவர்!