சென்னை: தெலங்கானா மாநிலத்தில், கடந்த 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன், பள்ளி படிப்பை அரசுப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர், சட்டப்படிப்பை முடித்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன் 1986ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு ஏற்றார். மேலும், தந்தையிடம் ஜுனியர் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய அவர், 1991ஆம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யபட்டார்.
மேலும், இவர் சட்டப்படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்ற பதிவாளராகவும் பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு 2022 மார்ச் மாதம் தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவராஜு நாகார்ஜுனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த மாதம் பணியிட மாறுதல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நூலக கட்டட கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதியாக டாக்டர்.தேவராஜு நாகார்ஜுனுக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், இவர் அடுத்த ஆண்டு 2024 ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்றதை அடுத்து நீதிபதிகள் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நீதிபதிகள் காலிப்பணியிடம் 15ஆக குறைந்துள்ளது.
இதையும் படிங்க: உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 13,089 மாணவர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!