சென்னை: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகச் சிலர் சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதை அடுத்து தமிழ்நாடு, பீகாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வதந்திகள் வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
சித்தரிக்கப்பட்ட வீடியோவின் உண்மைத் தன்மை தெரியாமல் பல மாநிலங்களிலிருந்து அரசியல் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் தமிழகக் காவல்துறை டிஜிபி வீடியோ குறித்து விளக்கம் அளித்து இருந்தார். வேறு எங்கு நடந்த ஒன்றைத் தமிழகத்தில் நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகக் காவல்துறையும், தமிழக அரசும் புலப்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல் தவறாக வீடியோ சித்தரித்து தம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் மீது ஆளும் திமுக அரசு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் நடந்து கொண்டதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதேபோல் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பிஜேபி பீகார் என்ற twitter பக்கத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த அட்மின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதனை முடக்க ட்விட்டர் நிறுவனத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்களிடம் கேட்டபோது தங்கள் ஊரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காகச் செல்கிறோம் என்றும், தமிழகத்தில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை பாதுகாப்பாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த அரசு துறையைச் சார்ந்த குழுக்கள் தமிழக உயர் அதிகாரிகளை சந்தித்து வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்வது குறித்து ஆலோசனைகள் செய்தனர். இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் சுமார் 5,000 வட மாநில தொழிலாளர்களில் 1,500 க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த இரண்டு நாட்களில் சென்று உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் மீதமுள்ள தொழிலாளர்களை காவல்துறையினர் சந்தித்தனர். அப்போது, நாம் அனைவரும் இந்தியர் என்பதை குறிக்கும் வகையில் அனைவரும் இணைந்து தேசிய கீதம் பாடினார்கள். மேலும் தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசும் காவல் துறை இணைந்து செயல்படுவதாக அவர்களுக்கு புரியும்படி இந்தியில் காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஸ் சிங் பேசியதோடு, வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
இதையும் படிங்க: ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - சுற்றுலா பயணிகளுக்கு என்னாச்சு?