சென்னை தீவுத்திடலில் ‘மதராசபட்டினம் விருந்து’ என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார்.
இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “நோய் நொடியற்ற, உடல் வலிமை உள்ள உழைக்கக்கூடிய மக்கள் சமுதாயம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியம். ரசாயனப் பொருட்கள் கலப்படம் இல்லாத உணவு தானியங்கள் மற்றும் பொருட்களால் உற்பத்தி செய்யப்பட்ட தரமான சுகாதாரமான உணவுதான் மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு அடிப்படைத் தேவையாக உள்ளது.
உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்பட இயற்கை உணவுகள், பூண்டு, வெங்காயம், கீரைகள், முளைகட்டிய தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவே மருந்து, ஒன்று குறைவாக அல்லது அளவாக உண்ண வேண்டும். அதிகம் உண்டால் எதிர்காலத்தில் மருந்தே உணவாகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இளைய சமுதாயத்தினர்தான் நமது நாட்டின் எதிர்காலத் தூண்கள். தற்போது ஏராளமான இளைஞர்களும் குழந்தைகளும் பர்கர், பீட்சா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அவற்றில் உப்பும், கொழுப்பும், சர்க்கரையும் அதிகம் உள்ளதால் அவற்றை உண்பவர்களுக்கு நினைவாற்றல் குறைவு, தலைவலி, உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு உள்பட பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று பேசினார்.