சாலைகளில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டித் தருவது தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, சாலைகளில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என அரசு பல முறை அறிவித்தும், சென்னையில் இன்னும் பலர் சாலைகளில் வசிக்கும் நிலை உள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கு பதலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘2012ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தின்படி, குடிசை பகுதியில் வாழும் 15 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்ட திட்டமிட்டார். மேலும், இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், குடிசை இல்லா நகரமாக சென்னையை உருவாக்க உறுதியான, தரமான வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இன்று படிப்படியாக குடிசைகள் கணக்கெடுக்கப்பட்டு 400 சதுரடி பரப்பளவில் இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு விரைவில் தரமான வீடுகள் கட்டித்தரப்படும்’ என தெரிவித்தார்.