இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் அவர்களின் லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 11ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை வீடியோ பதிவுகளாக படப்பிடிப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பணிகள் நடைபெறவேண்டும்.
ஒரே ஆசிரியரை பயன்படுத்தாமல், வெவ்வேறு பிரிவு ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ பதிவு தயாரிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் மூலம் வீடியோ பதிவுகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக, கல்வி தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கிவைத்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பிற வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் சுமார் 2.30 மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்காக அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ பதிவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இணையவழி கல்வி மற்றும் தொலைக்காட்சி மூலம் கற்பித்தலுக்கு வீடியோ பதிவாகும் பணி தொடக்கம்!