சென்னை: தமிழ்நாட்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்வதற்காக புன்னகை என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு பல் மருத்துவக்குழுவினர் நேரடியாக சென்று மாணவர்களின் பல் சொத்தை, ஈறு பிரச்னை போன்றவற்றை கண்டறிந்து பள்ளிகளிலேயே சிகிச்சை அளிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைந்து நடமாடும் மருத்துவக்குழுக்களின் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதற்காக புன்னகை என்ற புதியத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு பல்மருத்துவக்கல்லூரியின் முதல்வர் விமாலா கூறும்போது, “பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்வழி நோய்களான பல்சொத்தை, ஈறுபிரச்னை உள்ளிட்டவை குறித்து பள்ளிகளில் முகாம் அமைத்து மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும். பல் சொத்தை ஈறு பிரச்னைக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்படும். இங்கு சிகிச்சை அளிக்க முடியாதவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பற்களை சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு பல் சுத்தம் செய்வது குறித்தும் கற்றுத் தரப்படும். பல்சொத்தையால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து வருகிறது.
பல்சொத்தை குழந்தை பிறந்த 6 மாதங்களில் பல் முளைக்க ஆரம்பித்த உடன் வர ஆரம்பிக்கும். எனவே சாப்பிட்டப் பின்னர் பல் மீது எந்தப் பொருளும் ஒட்டிக் கொள்ளாத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும். 6 வயதிற்கு மேல் பல் விழுந்து முளைக்கும். தற்பொழுது நாம் உண்ணும் உணவில் சர்க்கரை சத்து அதிகளவில் இருப்பதால் பல் மீது படிந்து சொத்தை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களுக்கு வாயில் வலி ஏற்பட்டு, படிப்பில் கவனச் சிதறல் ஏற்படுகிறது.
அதனை கண்டறிந்து பல் சொத்தையை அகற்றி விட்டாலும், பல் ஈறு பிரச்னையை சரி செய்து விட்டால் அவர்கள் வாயில் வலி இல்லாமல், படிப்பில் கவனம் செலுத்த முடியும். மேலும் தன்னம்பிக்கை ஏற்பட்டு நன்றாக படிக்கவும் முடியும். எனவே பல் பராமரிப்பிற்கு தினமும் 2 நிமிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என கூறினார்.
தமிழ்நாடு பல்மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியர் லீனா செல்வமேரி கூறும்போது, “பள்ளி மாணவர்களுக்கு பல்லை சுத்தாமாக பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புன்னகை என்ற குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. பல் சுத்தம் குறித்து பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முகாம் அமைத்து மாணவர்களின் பல் பிரச்னைகளை கண்டறிந்து பள்ளிகளில் அளிக்க முடிந்த சிகிச்சை அளிப்பதுடன், தேவைப்படும் போது மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படும். தற்போதைய உணவு பழக்க வழக்கங்கள் பல் சொத்தை வருவதற்கு காரணமாக உள்ளதாக” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு அதிகரிக்கும் சிறுநீரகப் பாதிப்பு - அமைச்சர் தகவல்!