சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 71 காய்ச்சல் நோயாளிகளில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. மேலும் பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனையையும் சிகிச்சையையும் பெற்று கொள்ளுங்கள். ஆரம்பத்திலிருந்தே முறையான சிகிச்சை பெற்றால் டெங்கு காய்ச்சலில் இருந்து முற்றிலும் குணமடையலாம்.
தற்போது பொது சுகாதாரத் துறை உள்ளாட்சித்துறையுடன் இணைந்து டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால் படுக்கை வசதி உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுங்கள் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து வருகின்றனர். டெங்குவால் நிச்சயமாக எந்தவித உயிரிழப்பும் இல்லாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டும் கண்காணித்தும் வருகிறோம். கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடிகளை வளர்ப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" என்றார்.