சென்னை: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த நிலையில், 2 பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இதற்கு பல்வேறு தரப்பினரும் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான மணிப்பூரில் ஆளும் பா.ஜ.க அரசு பதவி விலக கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திமுக மகளிரணி சார்பில் திமுக எம்.பி.யும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் இன்று (ஜூலை-23) ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கணிமொழி, ''பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்று வரை இந்தியாவை வன்முறையின் நாடாக இருக்கிறது. தினம் தினம் பாஜக ஆளும் மாநிலத்தில் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது.
மணிப்பூர் மக்களின் மனதை அம்மாநிலத்தின் அரசும் மற்றும் மத்திய அரசும் புண்படுத்திக் கொண்டே இருக்கிறது. அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். உலகத்தையே உலுக்கும் சம்பவம் நடைபெற்று உள்ளது. ஆனால் நாட்டின் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இருக்கிறார்.
மணிப்பூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க பாஜக தான் காரணம். ஆனால் பிரதமரோ ஒரு நடவடிக்கை எடுக்காமால் அங்கு இருக்கும் குக்கி மற்றும் நாகர் இன மக்களுக்கு துரோகம் செய்பவர்களாக இருக்கிறார். இவ்வளவு பெரிய கலவரம் ஒரே நாளில் உருவாகவில்லை. காலம் காலமாக அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை அந்த மாநிலத்தின் அரசு எதுவும் கண்டு கொள்ளவில்லை என்பது என்ன விதத்தில் நியாயம்? மேலும், நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க பாஜக அரசு முன்வரவில்லை. ஜனநாயகத்தை மதிக்காமல் இருக்கிறார். உச்சநீதி மன்றம் தானாக வந்த பிறகு தான் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மே மாதம் 4ஆம் தேதி பெண்களுக்கு நடந்த கொடுமைக்கு இது வரை எந்த ஒரு நவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக" என்றார்.
இதைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 24) அன்று தமிழகம் முழுவது திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை எதிரித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தார் திமுக எம்பி கனிமொழி.
இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்: சீனா இந்தியாவில் கலவரங்கள் மூட்டுகிறது - ஹெச். ராஜா பேட்டி