சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டு "எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர்" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி, அவதூறு வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இன்று (மார்ச் 23) தீர்ப்பளிக்கப்பட்டது.
இறுதி தீர்ப்பளித்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தியை குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி எச்எச் வர்மா தீர்ப்பு வழங்கினார். அதேநேரம் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
முப்பது நாட்களில் மேல்முறையீடு செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே போல் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு தலைமைச் செயலக வாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் (சென்னை சத்யமூர்த்தி பவன்) முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் துணை தலைவர் கோபண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல்காந்தி மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ள பாஜக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரசை சேர்ந்த இருபது நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் திடீரென மோடியின் உருவ பொம்மையை எரித்து அண்ணா சாலையில் அமர்ந்து தர்ணா போரட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ராகுல் சிறை...ரயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி - நக்கலடித்த அண்ணாமலை!