சென்னை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர்ச்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக 'அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்த கலந்து ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், மேலிட பார்வையாளர் கொடிக்குனில் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த கே.எஸ். அழகிரி,
"அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம் என்ற பிரசார இயக்கத்தை ஜனவரி 26ஆம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத மரபு மீறிய, மக்கள் முகம் சுளிக்கிற காரியத்தை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். தமிழ்நாடு போன்ற ஜனநாயகப் பூங்காவில் ரவியை போன்ற ஆளுநர் செயல்பட முடியாது. காவல் துறையின் பின்புலம் கொண்டவருக்கு ஜனநாயகத்தைப் பற்றி தெரியாது.
தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு ஆளுநர் வெளியே சென்றுள்ளார். மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் மாற்றி படித்தால், பாஜக மற்றும் மோடி ஏற்றுக்கொள்வார்களா, அதிகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டை மிரட்டிப் பார்க்கிறது. ஆளுநரின் ஜனநாயக விரோதப்போக்கை தமிழ்நாடு அரசியல் கட்சியினர் மாற்று பொது மக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். முதலமைச்சர் அன்று சிறப்பாக செயல்பட்டார்.
மேலும் வரும் ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பேசிய தினேஷ் குண்டுராவ், ’மக்களின் தினசரி பிரச்னைகளை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பேசியிருக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினைவாதம் தற்போது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சமூக பிரச்னையாக இருக்கிறது.
பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றினாலும் நாம் அனைவரும் ஒருவர் தான். அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்பும் பிரசார இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களை வீடு வீடாக காங்கிரஸ் கட்சி சென்றடையும்’ என்றார். மேலும் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு, மாநிலங்களின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:Test Purchase: வணிகர்களை வதைக்கும் திட்டத்தை ரத்து செய்க - தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு