ஆவடியை அடுத்த கோயில்பதாகை ஏரியை ஆக்கிரமித்து புதிய வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிற்கு அடிக்கடி புகார்கள் வந்தன. இதனையடுத்து, அவர் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்களை அகற்ற ஆவடி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அலுவலர்கள் கோவில்பதாகை ஏரிக்குச் சென்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு ஏரியை ஆக்கிரமித்து புதிய வீடுகள் கட்டப்பட்டும், பிளாட்டுகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆவடி வட்டாட்சியர் செல்வம் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலமாக ஏரியை ஆக்கிரமித்து இருந்த வீடுகள் மற்றும் முள் வேலிகள் அமைத்து பிளாட் போட்ட இடங்களை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதில், ஏரிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பு மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.8.40 கோடி ஆகும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, வருவாய்த்துறை உயர் அலுவலர் கூறுகையில், 'ஏரியை ஆக்கிரமித்து 800க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை மூலமாக ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்து உள்ளோம். அவர்களாகவே, முன்வந்து கட்டடங்களை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் விரைவில் ஈடுபடுவோம். மேலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மதுரை அருகே மூன்று ஐம்பொன் சிலைகள் திருட்டு!