சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணைத் தயாரிப்பாளராக இருந்தார். இவர் கடன் தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலையால் உயிரிழந்தார்.
கெடுபிடி காட்டும் சினிமா பைனான்சியர்கள்
சினிமா துறையில் பைனான்ஸ் கொடுத்த பணத்தைத் திருப்பித் தர முடியாமல், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், தயாரிப்பாளர்களை பைனான்சியர்கள் கெடுபிடி செய்துவருவது பற்றியும், ஞானவேல்ராஜா புலனாய்வு இதழ் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது தெரிவித்திருந்தார். அதில், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் குறிப்பிட்டார்.
அவதூறு வழக்கு
இதனால் ஞானவேல் ராஜா மீதும், தனியார் புலானாய்வு இதழ் மீதும் பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தாக்கல்செய்தார்.
இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி ஞானவேல்ராஜா சார்பில், 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில் தனக்கு எதிரான வழக்கில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும், வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு ரத்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பண மோசடி வழக்கை ரத்து செய்ய கோரிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மனு தள்ளுபடி!