கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாகவும் அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பிருப்பதாகவும் பேசினார். இதனையடுத்து அவர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், தனக்கெதிரான அவதூறு வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயராமன் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், டிசம்பர் 6ஆம் தேதி அதே தொலைக்காட்சியில் தான் பேசிய வீடியோ ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்துள்ளது சட்ட விரோதமானது என ஜெயராமன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக 8 வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயராமனுக்கு எதிராக நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.