சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் ஒளவை நடராஜன்(85) இன்று (நவ.21) மாலை காலமானார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936ஆம் ஆண்டு பிறந்த தமிழறிஞர் ஒளவை நடராஜன், 1992ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ்ப் பல்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியுள்ளார். மேலும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராஜன் பணியாற்றியுள்ளார். 1975ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குநராக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு முதல் 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியாக இல்லாமல் அரசு துறை செயலராக முதன்முதலில் நியமிக்கப்பட்டவர் ஒளவை நடராஜன்.
2014ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், 2015ஆம் ஆண்டு முதல் சென்னை பாரத் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பதவி வகித்தார். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருது, இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது, இலங்கை, கம்பர் கழகத்தின் “தன்னேரில்லாத தமிழ் மகன் விருது”, இலங்கை, கொழும்புக் கம்பன் கழகம் வழங்கிய கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம், திருவெம்பாவை விளக்கம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சென்னை அண்ணாநகரில் வசித்து வந்த ஒளவை நடராஜன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். ஏற்கெனவே கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், சிகிச்சை பெற்றுவந்தவர், தற்போது மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(நவ.21) உயிரிழந்தார்.
தமிழறிஞர் ஒளவை நடராஜன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து மற்றும் தமிழறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனச் சேவைகளை முடக்கியுள்ளது' - ஓபிஎஸ்