மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. பேரவைத் தலைவர் தனபால் சட்டப்பேரவையை தொடங்கி வைத்து சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் (1977-1980) பா.சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி. சாமி, எஸ். காத்தவராயன், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோருக்கு பேரவை உறுப்பினர்கள் முன் இரங்கல் அவைத்தலைவர் தனபால் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அப்போது, அன்பழகன் குறித்து பேசுகையில், “திராவிட இயக்கக் கொள்கை பிடிப்பில் ஆழமாக இருந்தவர். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருடன் அரசியலில் இணைந்து பணியாற்றியவர். ஆழமான கருத்துக்களை அனைவரும் ஏற்கும்படி கூறுபவர். அவையை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்தவர்” என்று தெரிவித்தார்.
இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, வருகின்ற 11ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.