திருவள்ளூர் மாவட்டம் ரமணசேரி கிராமத்தில் டி.டி.மெடிக்கல் அண்ட் எஜூகேஷன் டிரஸ்ட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கிறது என 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்து போல் போலி ஆவணம் தயாரித்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கவுன்சில் உதவிச் செயலாளர் சவிதா, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு மார்ச் 26ஆம் தேதியன்று கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று இமெயில் மூலம் அனுப்பிய கடித்தத்தினை உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர், அந்த கடித்தத்தை பார்த்த அலுவலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் துறையில் இருந்து அளிக்காத ஒரு கடித்ததில் செயலாளரின் கையொப்பம் இருந்துள்ளதால் அதனை மறுத்து மீண்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் ஏப்ரல் 9ஆம் தேதியன்று இந்திய மருத்துவக் கவுன்சில் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மக்கள் நல்வாழ்வுத்துறை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று இமெயில் மூலம் கடிதம் அனுப்பியதாக கூறப்பட்ட கடிதம் போலியானது. ஏற்கனவே இந்த மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் மற்றும் அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்தது. இதனடிப்படையில், முதல்முறையாக முறைப்படி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த மருத்துவக் கல்லூரியின் குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த கல்வி நிறுவனத்தை தொடங்குவதற்கான திட்ட அறிக்கைக்கு அரசு எங்கும் அனுமதி அளிக்கவில்லை.
மேலும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு எந்தவிதமான கடிதமும் அளிக்கப்படவில்லை. எனவே இக்கடிதம் போலியனது, அதற்கான சட்ட நடிவடிக்கையை இந்திய மருத்துவக் கவுன்சில் மேற்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த போலி ஆவணம் அளித்த நிறுவனத்தின் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.