சென்னை ஆதம்பாக்கத்தில் ஆலந்தூர் பகுதி திமுக சார்பில் திமுக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்கும் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி ஆகியோருடன் பங்கேற்று உரையாற்றினர்.
பொதுக் கூட்டத்தில் டி.ஆர் பாலு பேசுகையில், "திமுக ஆட்சியில் திராவிட மாடல் ஆட்சி என உருவாக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. மாநில சுயாட்சி கொள்கையுடன் சமூக நீதி இணைந்தது தான் திராவிட மாடல். மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை 1970ல் முன்மொழியப்பட்டது. 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற போராடினோம்.
நீட் தேர்வுக்கு பிறகு 49 சதவீதம் தான் தருகின்றனர். மாநில சுயாட்சி இல்லாததால் 69 சதவீதம் கிடைக்கவில்லை. கல்லூரி, வேலை வாய்ப்புகளில் மாநிலத்தில் 69 சதவீதம் கிடைக்கிறது. மத்தியில் வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 27 சதவீதம் தான் கிடைக்கிறது. மாநில சுயாட்சி என்பது உரிமைகளைப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாடல் வளர வேண்டும். இந்த திராவிட மாடல் விரைவில் முழுமையாகக் கிடைக்கும்" என்றார்.
அதன் பின் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், "பஸ்சில் பயணிகளின் வசதியை பார்க்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் டிக்கெட் வாங்கி சென்றாரா என்று அண்ணாமலை கேட்கிறார். எம்எல்ஏ, எம்பிக்கள் இலவசமாக செல்லலாம். அடிப்படை அறிவு கூட இல்லாத அண்ணாமலைக்கு யார் ஐபிஎஸ் பட்டம் தந்தது. விரைவில் அண்ணாமலைக்கு டிக்கெட் தரப்படும்.
கர்நாடகாவில் எத்தனை பேரை சுட்டுவிட்டு வந்தார் தெரியுமா என்கிறார்கள். அண்ணாவை பற்றிய பேசிய கிருபனந்த வாரியார் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆருக்கு பொன்மன செம்மல் படத்தைத் தந்த பின்னரே வந்தார். அதே நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்" என்றார்.
இதனையடுத்து, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில், "பெட்ரோல், கியாஸ் ஆகிய விலை ஏற்றத்திற்கு எதிர்கட்சிகள் போராடியதா. மக்களை திசை திருப்பி மத, உணவு பற்றி பேசக்கூடாது. அமைச்சரவை தீர்மானம் தந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டியது ஆளுநர் கடமை. ஆட்டுக்கு தாடி தேவை இல்லை என்று அண்ணா சொன்னார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 2 ஆண்டுகளில் பிரதமராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும். இந்தியாவில் திராவிட மாடல் வளர வேண்டும். இந்தி பேசும் ஒரு மாநிலம் கூட வளர்ச்சி பாதையில் இல்லை. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஒன்றாக வாழ வெறுப்பு அரசியலைத் தவிர்த்து நல்ல பிரதமரை உருவாக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.