ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்! - ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம்
சென்னை: நியாய விலைக் கடைகளில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களுக்கு டோக்கன் வழங்கப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்! date change in provide token for ration products](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6917876-thumbnail-3x2-nhda.jpg?imwidth=3840)
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது.
ஏப்.13ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். இதனிடையே நோய்த் தொற்று ஏற்படாத வகையில் அத்தியாவசியப் பொருள்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏப்.24,25 ஆகிய நாள்களில் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று டோக்கன் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது அதற்கு மாற்றாக வரும் மே 2,3 ஆகிய நாள்களில் டோக்கன்கள் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியவசிய பொருள்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட நாளில் நியாய விலை கடைக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நடைமுறையின்படி, மே மாதம் 4ஆம் தேதி முதல் அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருள்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.