சென்னை: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. ஆர். ரவீந்திரநாத் இன்று (பிப்.04) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக, சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இம்மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்து வந்தன. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் போக்கிற்கு எதிராக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் உள்ளிட்டப் பல்வேறு மாணவர் அமைப்புகளும் குரல் கொடுத்து வந்தன.
நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆளுநர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராக இல்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது. பாஜக அரசு என்ன நினைக்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு முகவராக, தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார்.
மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்
ஆளுநரின் இந்தப்போக்கு சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் எதிரானது. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்தியுள்ளார்.
எனவே, மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியல்ல. ஏனெனில், அது தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்லூரி அல்ல. கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் உதவியுள்ளது என ஆளுநர் தரப்பில் கூறப்படுவது சரியல்ல.
நீட் நுழைவுத் தேர்வு, பயிற்சி மையங்களில் பயிற்சி பெற முடியாத நிலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்குகிறது. பயிற்சி மையங்களில் சேர வசதியில்லாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதிக்கிறது. அரசுப்பள்ளி, மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.
இதை நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு போதிய தரவுகளுடன் உறுதி செய்துள்ளது. அது மட்டுமல்ல, நீதியரசர் கலையரசன் குழுவும் இதை உறுதிசெய்துள்ளது.
கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலவில்லை
நீட் மட்டுமல்ல, எந்த ஒரு போட்டித்தேர்வும் இன்றைய நிலையில் வசதிபடைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த உண்மையைக் கருத்தில் கொள்ள ஆளுநர் தவறியது வருத்தமளிக்கிறது. நீட் ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து பொருளாதாரச் சுரண்டலைத்தடுக்கிறது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் கூறுவதும் சரியல்ல. நீட் தேர்வால் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலவில்லை. நீட் தேர்வுக்கும் கட்டணத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லை.
ஏற்கெனவே 100 விழுக்காடு தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் இருந்தது. நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணத்தை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணத்தை நிர்ணயம் செய்யவேயில்லை. ஒன்றிய அரசு தேசிய மருத்துவ ஆணையச்சட்டத்தின் (NMC) மூலம் 50 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் முறைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
100 விழுக்காடு இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் இருந்ததை ஒன்றிய அரசு விழுக்காடாக குறைத்துவிட்டது.
கார்ப்பரேட் கம்பெனிகள் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கலாம் என ஏற்கெனவே ஒன்றிய அரசின் வற்புறுத்தலால், இந்திய மருத்துவக் கழகத்தின் (MCI) விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஏழை எளிய மாணவர்கள் பாதிப்பு
என்.எம்.சி சட்டத்தின்படி, ஒன்றிய, மாநில அரசுகள் தான் அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவ இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். இச்சட்டத்திற்கு முரணாக, ஒன்றிய அரசு மாணவர் சேர்க்கையின் இறுதி நாளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாங்களாகவே "மாப்அப்” (Mop up) கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வசதியாக, அவர்கள் லாபம் அடைவதற்காக நீட் "கட் ஆஃப்” (cut off ) மதிப்பெண்ணையும் குறைத்து விடுகிறது. இதன் காரணமாக கடைசி நேரத்தில், குறைந்த மதிப்பெண் எடுத்த வசதியான மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் அதிகப் பணம் கொடுத்து சேர்ந்துவிடுகின்றனர். இது முறைகேடானதாகும்.
இத்தகைய மாணவர் சேர்க்கை மூலம் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை குழிதோண்டி புதைக்கப்படுவதால், ஏழை எளிய மாணவர்களில் ஒரு சிலர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றால் கூட, அவர்களால் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டணக் கொள்ளையால் ஏழை எளிய மாணவர்கள் பாதித்துள்ளனர். இதை நீட் தடுக்கவில்லை.
பட்டியலின மக்களுக்கும் கட்டணம்
இன்னும் சொல்லப்போனால் ஒன்றிய அரசு, நீட் நுழைவுத்தேர்வு மூலம், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு, வசதியான மாணவர்களைப் பிடித்துக்கொடுக்கும் ஏஜென்ட் போல செயல்படுகிறது.
அது மட்டுமல்ல, நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்க SC/ST மாணவர்களிடமும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இத்தேர்வையும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களே நடத்துகின்றன.
இத்தேர்வையும் லாப நோக்குடையதாக தேசியத் தேர்வு முகமை மாற்றிவிட்டது. எனவே, நீட் நுழைவுத் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதை தடுத்துள்ளது என்ற தமிழ்நாடு ஆளுநரின் கருத்தும் உண்மைக்கு மாறானதாகும். நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகின்றன.
பயிற்சி வகுப்புகள் வேண்டும்
நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியிருப்பது வரவேற்புக்குரியது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான நீட் தேர்வு பயிற்சியை அளிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றாலும், தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்படும் எய்ம்ஸ் உள்ளிட்ட பிற மாநிலங்களிலுள்ள மருத்துவம், செவிலியர் படிப்பில் சேர்வதற்கும், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்யவும் பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்!