சென்னை நகரில் பல கட்டடங்கள் இருந்தாலும், சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகைக்கு என்று தனி இடம் உண்டு. 1909ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, அப்போதைய பிரிட்டிஷ் அரசின் இந்திய வைசிராயாக இருந்த எரல்ட். மிண்டோவால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய கட்டடப்பணிகள் 1913ஆம் ஆண்டு முடிவடைந்தது.
அப்போதே சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பலங்கால நியோ கிளாசிக்கல் முறையில் மூன்று மாடிகளாக கட்டப்பட்டுள்ளது. 32 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கட்டடத்திற்கு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ரிப்பன், பெயர் சூட்டப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட ரிப்பன் மாளிகையில் ஏற்கனவே பலமுறை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்காலத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய பெருமைகளையும் வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள ரிப்பன் மாளிகையின் முதல் மாடியில் ஆணையர் கூட்ட அரங்கின் எதிர்புறத்தில் ஆபத்தான விரிசல் ஒன்று முதல் தளத்திலிருந்து மேல்தளம் வரை உள்ளது. இந்த விரிசல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
ஒட்டுமொத்த மாநகராட்சியின் அரசுக் கட்டடங்களையும் சீரமைத்து சுகாதாரத்தையும் உள்ளாட்சி நிர்வாகத்தையும் மக்களுக்குக் கொண்டுசெல்லும் மாநகராட்சி நிர்வாகம் வரலாற்று புகழ்பெற்ற ரிப்பன் மாளிகையில் ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தான விரிசலை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. உள்ளாட்சியை உறுதிப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் அதன் தலைமை அலுவலகத்தையும் சற்று உற்று நோக்கி ஆபத்து ஏற்படும் முன்பே விரிசலை சீரமைக்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கைவைக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
இதையும் படிங்க:
ஃபாத்திமா கொலை செய்யப்பட்டிருக்கலாம் - தந்தை அப்துல் லத்தீப் சந்தேகம்