கர்நாடக மாநிலம், மேகதாது அருகே பெங்களூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றியும், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமலும் அணை கட்டும் பகுதியில் கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
மேலும், அச்செய்தியில், அணைக் கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தமிழ்நாடு, கர்நாடக அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணைக் கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணைக் கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மூத்த அலுவலர், காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அலுவலர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
இக்குழு ஜூலை 5ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: '18+ க்கு தடுப்பூசி: அறிவித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துங்கள்' - கே எஸ் அழகிரி