கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூரில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தனது சொந்த இடத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த குமார், அவரது மனைவி, உறவினர்களுடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியில் குடியேறிய மாற்று சமுதாயத்தினர், குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியும், அடித்தும் வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். காலி செய்ய மறுத்த குமார், காவல் துறையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் அதிமுக உறுப்பினர்கள் இருப்பதால் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குமார் குற்றஞ்சாட்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கை எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், இவ்விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.