சென்னை மாவட்டம் குரோம்பேட்டை அடுத்த நியு காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ராமு (32). இவருக்கு சில நாள்களுக்கு முன்பு, கைம்பெண் ராணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்துவந்தார். இதனையடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமு, தினமும் இரவு குடித்துவிட்டு ராணியுடன் தகராறில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல் நேற்று (நவ. 29) இரவு அதிக மதுபோதையில் இருந்த ராமு, வழக்கம்போல் ராணியுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ராமு, வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிறகு தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற குரோம்பேட்டை காவல் துறையினர் ராமு உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வாடகைக்கு கார்களை எடுத்து, விற்பனை செய்து மாட்டிக்கொண்ட பலே கில்லாடி!