சென்னை: தமிழ்நாட்டில் சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவுக்கு ஒரு புகார் வந்ததாகவும், அதில் மக்களை சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் பேராசையுடன் விளையாடுவதன் மூலம் அவர்களை ஏமாற்றுவது தற்போது அதிகரித்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இதில் மோசடி செய்பவர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அல்லது யூடியூப் போன்ற சமுக வலைதளத்திலும் எஸ்எம்எஸ் அல்லது விளம்பரங்கள் மூலம் தொடர்பு கொள்வதாக அறியப்படுகிறது. ஆரம்பத்தில் சில யூடியூப் வீடியோக்கள், ஹோட்டல்கள், இணையதளங்கள் போன்றவற்றுக்கு "லைக்" மற்றும் கமெண்ட்" போடுவதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று சொல்லி மக்களின் பேராசையைத் தூண்டி விடுகிறார்கள்.
பின்னர், ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட முன்பணம் செலுத்தி அதிக பணம் பெறும் டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார்கள். மோசடி செய்பவர்கள் தங்களை சமூக சேவை செய்யும் யூடியூப் புரமோட்டர்ஸ் என்றும், ஆன்லைன் வேலைகளை வழங்குபவர்கள் என்றும் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்.
யூடியூப் விளம்பரதாரர் என்று தங்களை பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களை, சில யூடியூப் வீடியோக்கள், ஹோட்டல் பக்கங்கள், கம்பெனி இணையதளங்கள் போன்றவற்றுக்கு லைக்குகள் போடச் சொல்கிறார்கள். அதற்காக சிறிது பணமும் கொடுக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் ஒரு டெலிகிராம் குழுவில் சேர்க்கப்பட்டு பொதுவான அறிவுறுத்தலாக, சில வீடியோக்கள் அல்லது இணையதளங்களை லைக் செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்படும். இடையில் ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்தி, அதிக பணம் பெறும் டாஸ்க்கை அறிமுகப்படுத்தி மக்களை பிட்காயின் அல்லது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம் சில டாஸ்க்குகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள்.
பின்னர், அவர்கள் பரிந்துரைத்த இணைய போர்ட்டலில் உள்நுழைந்து உள்நுழைவு ID மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வழிகாட்டுவார்கள். மோசடி செய்பவரால் முதலீடு செய்வதற்கு வழிகாட்ட சில வழிகாட்டிகள் உதவி செய்வார்கள். எந்தவொரு டாஸ்க்கையும் முயற்சிக்கும் முன், ஒருவர் தனது கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைந்து, சில தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என்று சொல்வார்கள்.
மேலும், மக்களை நம்ப வைப்பதற்காக அவர்கள் செய்த முதலீட்டின் மூலம் பெற்ற லாபத்தை போர்ட்டல் பக்கத்தில் "சொத்து (Assets)" என்ற இடத்தில் காட்டுவர். பின்னர், அந்த நபர் வேறு ஆன்லைன் மூலம் முன்பணம் செலுத்தும் பணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அங்கு டாஸ்க்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மேலும், முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகமாக இருக்கும். இப்போது போர்ட்டல் பக்கத்தில் சொத்துக்களை பார்க்க மட்டுமே முடியும். தொகையை திரும்பப் பெற முடியாது. இதை வழிகாட்டியிடம் தெரிவிக்கும்போது, கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைந்துவிட்டது, தவறான விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள், வருமான வரித் துறைக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை, மொத்த தொகையைத் திரும்பப் பெறுவதற்கு டிக்கெட் உருவாக்க வேண்டும், சொத்து மதிப்பில் 30 சதவீதம் டெபாசிட் செய்ய வேண்டும் போன்ற நொண்டிச் சாக்குகளைக் கூறுவார்கள்.
எனவே ”வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிக்கவோ அல்லது லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம்” என்று தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும், எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தொலைபேசி அழைப்பு அல்லது செய்தி மூலம் ஓடிபியை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், சமீபகாலமாக இந்த மோசடி தொடர்பாக பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், பலர் தொடர்ந்து மோசடி நபர்களால் ஏமாற்றப்படுகின்றனர். எனவே, மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை "குறிப்பிட்ட நேரத்திற்குள், அதாவது 24 மணி நேரத்திற்குள்", ஹெல்ப்லைன் எண்ணான 1930ஐ தொடர்பு கொண்டு புகார் அளிப்பதன் மூலம், மோசடி செய்தவர் பணத்தை எடுப்பதற்கு முன், அதை மீட்டு திரும்பப் பெற முடியும்.
எனவே, ஆன்லைன் நிதி இழப்பு புகார்களுக்கு உடனடியாக ஹெல்ப்லைன் எண் 1930ஐ தொடர்பு கொள்ளவும். இந்த எண் மூலம் விரைவாக தொடர்பு கொண்டு புகார் கொடுத்தால்தான் இழந்த பணத்தை உடனே மீட்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த பாஜக தலைவர் யார்..? - எஸ்வி.சேகர் சொன்ன தகவல்