சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஏ.ஐ-டீப் ஃபேக் (Deepfake) வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில், இதற்குப் பல்வேறு பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோது, இது போன்ற பல வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்த நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள ஈ டிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் சாய் வெங்கடேஷ், சைபர் கிரைம் வல்லுனர் வினோத் ஆறுமுகத்துடன் நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது இது குறித்து வினோத் ஆறுமுகம் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவரின் முகம், குரல், ஆகியவற்றைப் பயன்படுத்தி காணொளி, புகைப்படம் போன்றவை ஒருவருக்குத் தேவைப்படுவதுபோல சித்தரிப்பது தான் டீப் ஃபேக் ஆகும்.
மார்ஃபிங்க் உடன் டீப் ஃபேக்கை ஓப்பிடமுடியாது. டீப் ஃபேக் என்பது ஒரு புகைப்படமோ இல்லை காணொலியோ புதியதாக உருவாக்குவது ஆகும். மேலும் இது மார்ஃபிங்கை விட 1000- மடங்கு ஆபத்தானது. டீப் ஃபேக் என்ற தொழில் நுட்பம் வந்த உடன் அதை வழக்கம் போல் தவறாகத் தான் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
தற்போது ஒரு பெண்ணின் புகைப்படம் கிடைத்தால் அவர்களை ஆபாசக் காணொளிகளில், ஆபாசப் புகைப்படங்கள் என சித்தரித்து உருவாக்க தான் தற்போது அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது. 2023இல் டீப் ஃபேக் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இதில் சைபர் கிரைம் குற்றவாளிகளும் மோசடியாளர்களும் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரசியல்களத்தில் டீப் ஃபேக்: அரசியல் தலைவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதற்கும், அரசியல் ரீதியான உறவுகளைச் சீர்குலைப்பதற்கும், தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய சாத்தியம் உண்டு.
சாமானிய மக்கள் வாழ்வில் டீப் ஃபேக்: டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டால், முதலில் சைபர் கிரைம் காவல்துறையின் புகார் தெரிவிக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடையது இல்லை என்று அவர்கள் நம்ப வேண்டும். மேலும் சமூகம் மற்றும் காவல் துறை உதவியுடன் தான் நாம் இதைத் எதிர்கொள்ள முடியும். தன்னிச்சையாக இதை எதிர்கொள்ள முடியாது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மன உறுதியாக இருப்பது மிகவும் அவசியமானது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் டீப் ஃபேக்: தற்போது அரசியல் சார்ந்து டீப் ஃபேக் விடியோக்கள் வருகின்றன. குறிப்பாகச் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் நாட்டின் பிரதமர் அவர் தமிழ்ப் பாடல் பாடுவது போல் வந்தன. இதை நாம் ரசித்தோம். அதுவே ஒரு அரசியல் களத்தில் தவறான செய்தியையோ அல்லது சமூகத்தைப் பற்றிய கருத்தையோ ஒரு அரசியல் தலைவர் தெரிவிப்பது போல் வந்தால்? நிச்சயம் வன்முறை வரும். ஏன் அமெரிக்கா தேர்தலில் டீப் ஃபேக் தாக்கத்தை எவ்வாறு குறைக்க வேண்டும் என்று அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசியல்களத்தில் டீப் ஃபேக்கை கட்டுப்படுத்துவது எப்படி?: தேர்தல் ஆணையம் இதற்கு வரைமுறை கொண்டுவந்தாலும், மக்களுக்கு இதைப் பற்றிய புரிதல் வேண்டும். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தேர்தலில் டீப் ஃபேக்கை நிறுத்த வேண்டும் என்றால் அனைத்து தரப்பினர்களும் ஒன்று சேர்ந்தால் இதைக் குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 500 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்று மோசடி! ஒருவர் கைது!