சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் சென்னை மண்ணடியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி சைபர் கொள்ளையர்கள், சைபர் தாக்குதல்கள் மூலம் 2.61 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் அன்றே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். வங்கியின் சர்வரை ஹேக் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக புகாரில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கொள்ளையர்கள் பணப்பறிமாற்றம் செய்த வங்கிக் கணக்குகளை முடக்கி, ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
வங்கியில் இணைய சேவையுடன் செயல்பட்டு வந்த கணினிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பிஷ்ஷிங் மெயில் அனுப்பி, அதன் மூலம் key logger என்ற சாப்ட்வேரை அதிகாரிகளுக்கு தெரியாமல் பதிவிறக்கம் செய்துள்ளனர். பின்னர் கணினியின் செயல்பாடுகளை கண்காணித்து தரவுகளை சேகரித்துள்ளனர். sweet 32 attack எனப்படும் சைபர் தாக்குதல் மூலமாக கூட்டுறவு வங்கியில் சர்வரில் நுழைந்து மொத்தமாக நெட்வொர்க்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
முழுமையாக திட்டமிட்டு தரவுகளை சேகரித்து, நவம்பர் மாதம் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. ஒரு கோடி ரூபாய் பணத்தை binance எனப்படும் இணையதளம் மூலம் நைஜீரியா நாட்டில் உள்ள இரண்டு வங்கி கணக்குகள் மூலமாக கிரிப்டோ கரன்சிகளாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய கணினியின் ஐபி முகவரியை வைத்து ஆய்வு செய்ததில், அவர்கள் டெல்லி உத்தம் நகரில் இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக நைஜீரியா நாட்டுக் கொள்ளையர்கள் 32 போலி வங்கி கணக்குகளை போலி ஆவணங்கள் மூலம் உருவாக்கி இந்த மோசடியை செய்தது விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து உத்தம் நகரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் ஏக்னே காட்வின், அகஸ்டீன் ஆகிய இரண்டு நைஜீரியர்களை கைது செய்தனர். இவர்கள் 8 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கணிணிகளை வைத்து மோசடி செய்துள்ளனர். இந்த கும்பல் குஜராத் மாநில கூட்டுறவு வங்கியிலும் சைபர் தாக்குதல் மூலம் பணத்தை கொள்ளை அடித்ததும் வழக்கு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சைபர் கொள்ளையர்களையும் தனிப்படை போலீசார் இன்று(ஜன.12) சென்னை அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், டெல்லி உத்தம் நகரில் ஆயிரக்கணக்கான நைஜீரியர்கள் பல்வேறு விதமாக நுழைந்து, இதுபோன்ற சைபர் கொள்ளைகளை நடத்தி வருவதாகவும், பகலில் வெளியே செல்லாமல் இரவு நேரங்களில் நோட்டமிட்டு இதுபோன்ற குற்றங்களை செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி.. சாமியார் வேடத்திலிருந்த ஆசாமி கைது!