சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை நீக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
பின்னர் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், “இளைஞர்களை மோசடி செய்து ஏமாற்றிய செந்தில் பாலாஜியை முதலமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார். ஏன் குற்றவாளியை முதலமைச்சர் இந்த அளவிற்கு இறங்கி வந்து காத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. திருமதி கனிமொழி அவர்கள் கைது செய்த போதும் வருத்தப்படாத முதலமைச்சர், தன் சகோதரிக்குக் கூட வருத்தப்படாத முதலமைச்சர் ஸ்டாலின், ஊழல் நடந்து விட்டது என கூறிக் கொண்டிருக்கிற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்.
ஊழல் குற்றச்சாட்டு தெரிந்த உடன் அன்றைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். ஏன் இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து நீக்கவில்லை, எல்லாவற்றையும் மறைத்து விட்டு, முதலமைச்சர் நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.
துறை அமைச்சர்கள் அனைவரும் டம்மி பீஸாக உள்ளனர். நீட்டுகின்ற இடத்தில் கையெழுத்து ஈடுபவராக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். அனைத்து அதிகாரமும் சபரீசன் கையில் இருக்கிறது. இதுவரைக்கும் கலால் துறைக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்திற்கு ஒரு பாறை ஏலத்திற்கு விட்டால் 250 கோடி ரூபாய். ஒரு வருடத்திற்கு 2500 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
பெண் அதிகாரியை திமுக சார்ந்த நிர்வாகிகள், கரூர் மாவட்டத்தில் மானபங்கம் செய்தனர். இதனைக் கேட்க காங்கிரஸ், சி.பி.ஐ.ம், சி.பி.ஐ உள்ளிட்ட எந்தக் கட்சியும் வரவில்லை என குற்றம்சாட்டினார். செந்தில் பாலாஜி ஒரு நோட்டு அடிக்கும் மிஷின். வழக்கை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
இந்த வழக்கு என்பது வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல இளைஞர்களை ஏமாற்றிய காரணத்தால், இது ஏதோ அ.தி.மு.க காலத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இல்லை. தேவசகாயம் கணேசன் ஆகிய தனிநபர் அளித்தப் புகாரின் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியிடம் ஏமாந்து கொடுத்த நபரின் புகார் இது. 2018ஆம் ஆண்டு இது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடிய போது இது மீண்டும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடைய பங்கை முறையாக விசாரித்து நடத்தவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மூன்று வழக்குகளில், செந்தில் பாலாஜியின் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆட்சி மாற்றம் அடைந்த பிறகு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. அமலாக்கத்துறை விசாரிக்கும் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அப்புறம் எதற்கு முதலமைச்சரிடம் காவல்துறை இருக்கிறது என கேள்வி எழுப்பினார். புகார் கொடுத்த நபர் தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.
அந்த நேரத்தில் தான் அமலாக்கத்துறை முதல் முதலாக 27- 7-2021 வழக்கைப் பதிவு செய்து குற்றவாளி செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்புகிறது, எங்கள் முன் ஆஜராகுங்கள் என்று. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் அமலாக்கத்துறை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. எந்த இடத்தில், உங்களுடைய விசாரணை தடை செய்யப்பட்டதோ, அந்த இடத்திலேயே விசாரணை தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு நடைபெற வேண்டும். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை தமிழக காவல்துறை விசாரணை நடத்தாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி இந்த இரண்டு ஆண்டுகளில் செய்திருக்க கூடிய கொள்ளைகள், அதை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் 2ஜி ஊழல்.
2ஜி வழக்கை விட மிகப்பெரிய ஊழலாக வெளிவந்து விடும், இதில் முதலமைச்சரின் குடும்பங்கள் சிக்குவார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்மை இருந்தால் உச்ச நீதிமன்றத்தை முதலமைச்சர் கேள்வி கேட்கட்டும். நான் அமைச்சராக இருந்தால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தி.மு.க வேட்பாளர் கூட வெற்றி பெற முடியாது” என அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்; பாஜகவுக்கு வார்னிங் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்!