சென்னை மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாகப் பராமரிக்காதது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு மதுரவாயல் - வாலாஜா இடையிலான சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவானது இன்று (மார்ச் 1) நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், நெடுஞ்சாலைப் பணிகள் முடிக்காவிட்டால் 75 விழுக்காடு கட்டணம் வசூலிக்கலாம் என்று சுற்றறிக்கை உள்ளதால் அதன்படி வசூலிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைக்கப்பட்டது.
மேலும் 50 விழுக்காடு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவால் தினமும் 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இந்தச் சாலையில் பயணித்துள்ளாரா எனக் கேள்வி எழுப்பி, சமீபத்தில் இரவு நேரத்தில் இந்தச் சாலையில் பயணித்த நீதிபதி ஒருவர் கடும் அச்சம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
டெல்லியிலிருந்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறைச் செயலாளரை இந்தச் சாலையில், வேலூர் பொற்கோவிலுக்குப் பயணித்து அறிக்கைத் தாக்கல்செய்ய சொல்லுங்கள் என மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்த நீதிபதிகள், 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் அலுவலர்கள் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்.எஸ். பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு!