சென்னை: மலேசியா, துபாய் நாடுகளிலிருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.55 கோடி மதிப்புடைய,3.16 கிலோ தங்கப் பசையைச் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 4 பயணிகளைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வரும் மூன்று பயணிகள், துபாயிலிருந்து மும்பை வந்த சர்வதேச விமானத்தில் தங்கம் கடத்தி வந்து, மும்பையிலிருந்து உள்நாட்டு விமானத்தில் சென்னைக்குக் கடத்தல் தங்கத்துடன் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்குக் கிடைத்தது.
இதனையடுத்து சுங்க அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக சென்னை விமான நிலைய உள்நாட்டு விமான நிலையத்தில், மும்பையிலிருந்து வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 3 ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த 3 பயணிகளும், சுங்க அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் உள்நாட்டுப் பயணிகள், நீங்கள் எப்படி இங்கு வந்து எங்களைப் பரிசோதிப்பீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.
உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கம்:இருப்பினும் சுங்க அதிகாரிகள் மூன்று பேரையும் மடக்கிப் பிடித்துத் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 9 பார்சல்களில், தங்கப் பசை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.அவர்களிடமிருந்து 2.86 கிலோ தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.4 கோடி.இதையடுத்து சுங்கத்துறை 3 பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளைச் சுங்கத்துறையினர் சோதனை இட்டனர்.அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.அவரை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 300 தங்கப்பசை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 14.5 லட்சம்.அதோடு அந்த பெண் பயணியை கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அடுத்தடுத்து நடத்திய சோதனையில், ரூபாய் 1.55 கோடி மதிப்புடைய 3.16 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து, பெண் உட்பட 40 பயணிகளைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க:ஜி20 நாடுகளை கௌரவிக்க டெல்லியில் தயாராகும் பூங்கா