தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வீட்டு வேலை செய்து வரும் பெண்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காகவே வீட்டின் உரிமையாளர்கள் வீட்டு வேலை செய்யும் பெண்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த மூன்று மாதங்களாக இவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தோராயமாக சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு வேலைகளான, கூட்டிப் பெருக்குவது, துணிகள் துவைப்பது, சமைப்பது மற்றும் வீட்டை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் வெகு சிலர் மட்டுமே சங்கம் அனைத்து அதில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
இதுகுறித்து இல்லத்தரசி ஒருவர் கூறுகையில், "எங்கள் வீட்டை பொறுத்தவரை நானும் என் கணவரும் வேலைக்குச்சென்று விடுவோம். பிள்ளைகளை பள்ளிக்கு தயார்படுத்தி அனுப்பி வைத்து விட்டு செல்வோம். எனவே, வீட்டில் சமைப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்ய நிச்சயமாக ஒரு பணிப்பெண் தேவைப்பட்டார். அதற்காக நாங்கள் ஒரு பணிப்பெண்ணை அமர்தி மாத சம்பளம் கொடுத்து வைத்திருந்தோம்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலால் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். காரணம் நானும் என் கணவரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறோம். இதனால் பணிப்பெண்ணுக்கு அதிகமாக வேலை இல்லை. இதைத் தவிர தொற்று பரவாமல் தடுக்க வேறு வழியில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் வீட்டு வேலைக்கு ஆள் வைப்பது பற்றி சிந்திப்போம்" என்றார்.
சென்னை தி.நகரில் வீட்டு வேலை செய்து வரும் புஷ்பா கூறுகையில், "நான் வேலை செய்யும் இடத்தில் ஊரடங்கு காரணத்தால் பணிக்கு வர வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்கள். இருப்பினும் வேலை செய்யாமல் கூட என் குடும்ப நிலை கருதி சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் இது எல்லா வீடுகளிலும் சாத்தியம் இல்லை என்பதே உண்மை. எனக்குத் தெரிந்து நூற்றுக்கணக்கான பெண்கள் ஊரடங்கால் வேலை இழந்து, உணவுக்குக் கூட வழியின்றி தவித்து வருகின்றனர். மேலும், அரசால் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயும் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி வாங்கிக் கொண்டாலும் அதனை சமைத்து உண்ண காய்கறிகள் வாங்க பணம் இல்லாமலும், அன்றாட வாழ்வை நகர்த்த முடியாமலும் தவிக்கின்றனர் பலர்" என்கிறார்.
அதனைதொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் க்ளாரா கூறியதாவது, "அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கென வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அல்லாத பிறருக்கும் வழங்குங்கள் என அரசை வலியுறுத்துகிறோம். ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை. புதியதாக சங்கத்தின் உறுப்பினர்களாக இணைய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றால் 15 வகையான ஆவணங்களை அவர்கள் கேட்கிறார்கள்.
மேலும், ஊரடங்கு காலமான இந்த நேரத்தில் அவற்றை சேகரிப்பது அதற்கான ஒப்புதல்களை அரசு அலுவலர்களிடம் பெறுவது என அலைந்தாலும், அலுவலர்கள் இது பற்றி தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கையொப்பம் இட மறுக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க தங்களையும் தங்களது பிள்ளைகளையும் பாதுகாக்க முடியாமல் வறுமையில் வாடுகின்றனர் வீட்டு வேலை செய்யும் பெண்கள்.
இந்த நிலை சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம் என தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை 35 விழுக்காடு பேருக்கு மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை வாழ்வா சாவா என்ற அடிப்படையில் இப்போது வரை உள்ளது" என்கிறார்.
இதில் மிகப்பெரிய பாதிப்புகள் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்குத்தான் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மூன்று மாதமாக சம்பளம் இல்லாததால் வீடுகளை காலி செய்ய வேண்டும் என வீட்டின் உரிமையாளர்கள் சொல்லி விட, வேறு வீடுகளும் கிடைக்காமல் தெருவோரங்களில் தஞ்சமடையும் அவல நிலையும், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச நிவாரணமாக வீட்டு வாடகை கேட்டு அழுத்தம் கொடுக்கும் நிலை மாற அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். வீட்டு வேலை செய்யும் டொமஸ்டிக் தொழிலாளர்களின் வாழ்வை காக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: 12 வருடங்களாக இருளில் மூழ்கி கிடக்கும் தெற்கு சீத்தப்பட்டி... ஒளி கொடுக்குமா அரசு?