திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களின் பட்டா நிலத்தில் காப்பி, தேயிலை, பிளம்ஸ், வேர்க்கடலை, பீட்ரூட், மிளகு, மலைப் பழம் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிர்களைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்திவருவதால், அவற்றை சுட்டுத்தள்ள அனுமதி கோரி, கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஏ.ஆர். கோகுலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விவசாய நிலங்களை அழித்துவரும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொல்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ஓசூர், கோவை, மதுரை, சேலம், ஹாசனூர், சத்தியமங்கலம் ஆகிய ஒன்பது வனக் கோட்டங்களின் வனத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விவசாய நிலங்களை அழித்துவரும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.